Saturday, August 19, 2006

ஷோபா சக்தி - 'தம்பி' திரை விமர்சனம்

திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுக்களுக்குப் பாலபிஷேகம் செய்வது, அபிமான நடிகைகளுக்காகக் கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களுக்காக விரலை வெட்டுவது, அரைவேக்காட்டுத்தனமான மிகை உணர்ச்சித் திரைப்படங்களுக்கும் மலிவுத்தனமாக பாலியல் கிளர்ச்சிகளை உருவாக்கும் விடலைத்தனமான 'காதல்' படங்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் திரைப்பட ஆய்வாளர்களும் பாராட்டுக் கட்டுரைகள் எழுதுவது, உலக இலக்கியத்தைச் சவால் செய்வதாய்ச் சொல்லிக் கொள்ளும் இலக்கிய எழுத்தாளன் பேய் பிசாசு நம்பிக்கைகளையும் சாதி பெருமிதங்களையும் தூக்கி நிறுத்தும், துப்பட்டாக்களைக் கண்காணிக்கும் சமூக விரோதத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப்படப் புகழ் நட்கத்திரங்களைத் தேர்ந்த சமூக சிந்தனையாளர்களாக உருவகித்து ஊடகங்கள் நேர்காணல் செய்வது, உணர்ச்சிப் பாவலர்கள் ஆணிய வக்கிரத்துடன் ஆபாசமாகத் திரைப்படப் பாடல்கள் புனைவது, சினிமா கவர்ச்சி என்ற ஒற்றை ஆயுதத்தின் துணையுடன் மட்டுமே திரைப்படத் துறையினர் அரசியல் பண்பாட்டு தளங்களின் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய சக்திகளில் ஒன்றாக மாறிவிடுவது போன்ற அட்டூழியங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ முடியும் என அடிக்கடி எமது தமிழகத் தோழர்கள் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு. தோழர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரு செய்தி என்னிடம் உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையேயும் இந்த அட்டூழியங்களில் சிலவாவது நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன.

பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் பாரிஸ் நகரத்தில் ஈழத் தமிழர்கள் நடமாடும் கடை வீதிகளில் எல்லாம் இயக்குனர் சீமானின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட 'தம்பி' திரைப்படத்துக்கான விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. நடிகர் மாதவனின் விதம் விதமான தோற்ற நிலைகளின் கீழே 'அச்சந் தவிர், ரெளத்திரம் பழகு' என்ற புதிய ஆத்திசூடியின் வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. அச் சுவரொட்டிகளில் இப்படியாகவும் ஒரு வரி இருந்தது "முக்கிய குறிப்பு - இத் திரைப்படம் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியது" . அதே நேரத்தில் அய்ரோப்பியத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தம்பி திரைப்பட முன்னோட்டம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. முன்னோட்டத்தில் முத்தாய்ப்பாய் சே குவேரா, மாவோ இருவரதும் புகழ்பெற்ற இரண்டு கூற்றுக்கள் திரையில் எழுத்துக்களாய் மின்னின. தம்பி திரைப்படம் வெளியானதும் புலம்பெயர் வாரப் பத்திரிகைகள் தம்பி படத்தைக் கொண்டாடின. மின் இலத்திரனியல் ஊடகங்களில் தம்பி திரைப்படமும் இயக்குனர் சீமானும் சே குவேரா பனியனும் முக்கிய பேசு பொருட்களாயின. மார்க்ஸின் மாணவன் பெரியாரின் பேரன் தம்பியின் தம்பி என்று என்று கிறுக்குத்தனமாகச் சீமான் பெரிய சாமானாக வர்ணிக்கப்பட்டார்.

இந்த அமளிதுமளிக்குள் சீமான் அவுஸ்ரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு 20.10.2005 அன்று வழங்கியிழுந்த நேர்காணலை இணையத்தளம் ஊடாகச் சற்றே தாமதமாகக் கேட்க நேர்ந்தது. அந் நேர்காணலில் சீமான் இவ்வாறு கூறினார்: "சிங்கள அரசு முழுப் பலத்துடன்தமிழ் மக்களை அழித்தொழிக்கும் போது அதை ஒரு அரசின் இறையாண்மையாக உலகம் பார்க்கிறது, ஆனால் நாங்கள் கையில் ஆயுதத்தை எடுக்கும் போது அதை வன்முறையாகத் தீவிரவாதமாக உலகம் சொல்கிறது. அப்படிச் சொல்லக் கூடாது என்பதையே உள்ளர்த்தமாகக் கொண்டு தம்பி திரைப்படத்தை எடுத்து வருகிறேன்" இவை எல்லாற்றினதும் உச்சமாகத் தம்பி வெளியானதும் சீமான் ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் "தம்பியின் வெற்றியைப் பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் அர்ப்பணிக்கிறேன்" என்றார். இனி வருவது தம்பி திரைப்படத்தின் கதை:

அன்பே உருவான பெற்றோரும் பாசமுள்ள ஒரேயொரு தங்கையும் உள்ள தமிழ் சினிமாவின் மாதிரிக் குடும்பமொன்றில் பிறந்தவன் தம்பி என்ற வேலுத் தொண்டைமான். இவனுக்கு முன்னதாகப் "படையப்பா", "பரமசிவன்", "திருப்பாச்சி" போன்றவர்களும் இத்தகைய மாதிரிக் குடும்பத்தில் பிறந்தவர்களே. கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவனான தம்பி மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கத் தொடங்குகிறான். வேலைக்குப் போய்க் கொண்டிருக்கையில் தெருச்சண்டியன் பாண்டியனின் தம்பி செய்யும் கொலையொன்றைத் தற்செயலாகச் சீமானின் தம்பி பார்த்துவிடுகிறான். தம்பி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால் பாண்டியனின் தம்பி உள்ளே தள்ளப்படுகிறான். இதனால் வெகுண்டெழுந்த தெருச்சண்டியன் பாண்டியன், தம்பியின் மாதிரிக் குடும்பத்தைக் கொன்றொழித்து விடுகிறான். இப்போது தம்பி சினந்தெழுந்து பாண்டியனைப் பழிவாங்க பாண்டியனின் வீட்டுக்குச் செல்லும் போது அங்கே பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைக் காண்கிறான். அந்தக் குடும்பம் தான் பாண்டியனைக் கொலை செய்வதால் பாதிக்கப்படக் கூடாது என எண்ணும் தம்பி பாண்டியனைச் சந்தித்து "நிறுத்திக் கொள்வோம்" என்கிறான். பாண்டியனோ தம்பியை அடித்து முள்ளுக் கம்பியில் காயப் போட்டுவிடுகிறான். காயங்கள் ஆறியதும் தம்பி வன்முறையை ஒழிக்கப் புறப்படுகிறான். வில்லன் குழுவினரை துரத்தித் துரத்தி மரண அடி அடிக்கிறான் தம்பி. தம்பி கொலை செய்வதில்லை ஆனால் கொலைக்கும் கோமாவுக்கும் உள்ள மயிரிழையில் தம்பியிடம் அடி வாங்கியவர்களின் உயிர் ஊசலாடுகிறது. இந்த மயிர் இழையில் தான் படமே நிற்கிறது.வன்முறைக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட வன்முறையைத் தம்பி கையில் எடுக்கிறான். "உதைக்கணும் உதைக்கணும் உதைப்பேன்" என்று முழிகளைப் புரட்டியவாறு ஒரு சைக்கோ மாதிரித் தம்பி அலையத் தம்பியின் சைக்கோவையும் தெருச் சண்டித்தனத்தையும் மாவீரம் என அர்த்தப்படுத்திக் கொள்ளும் அர்ச்சனா தம்பியை விரட்டி விரட்டிக் காதல் செய்கிறாள். தம்பிக்கு உலகைத் திருத்தும் வேலையிருப்பதால் அவன் அர்ச்சனாவின் திடீர்க் காதலை நிராகரிக்கிறான். என்றாலும், அர்ச்சனா விடாப்பிடியாக கனவில் தம்பியோடு இரண்டு காதற் பாடல்களை ஊரைச் சுற்றி மரத்தைச் சுற்றி பாடிவிடுகிறாள்.

இடையில் தம்பிக்கு மதியுரைஞராக வந்து வாய்க்கிறார் மணிவண்ணன். பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை இடிக்கும் வாலிப வயோதிக அன்பர்களை அடக்கிய தம்பியின் தீரச் செயல்களுக்குப் புரட்சிகர தத்துவார்த்தரீதியான விளக்கங்களை மதியுரைஞர் வழங்குகிறார். "நான் ஏன் தெருச்சண்டியன் ஆனேன்?" என்று பல்கலைக் கழகப் பரிசளிப்பு விழா மேடையில் தம்பி உருக்கமாக உரை நிகழ்த்துகிறான். அப்போது மேடையில் இருக்கும் செட் ப்ரொப்பர்டிகள் பின் வருமாறு :
மூன்று நாற்காலிகள், ஒரு மேசை, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி, ஒரு மைக் ஸ்ராண்ட், பாவலர் அறிவுமதி, ஒரு மின்விசிறி.

மீண்டும் தோன்றும் மதியுரைஞர் தம்பியிடம் கார்ல் மார்க்ஸ், சே குவேரா, பிரபாகரன் எல்லோரும் கல்யாணம் செய்ததால் தம்பியும் அர்ச்சனாவை காதலிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். உடனே தம்பி அர்ச்சனாவின் காதலை ஏற்றுக்கொள்ள அர்ச்சனா தம்பியின் காலில் தடாலென விழுந்து கும்பிடுகிறாள். கடைசி நேரக் கலவரத்தில் பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைச் சீமானின் தம்பி ஆபத்திலிருந்து காப்பாற்றுவதோடு பாண்டியனுக்கு அறிவுரையும் சொல்கிறான். மனம் திருந்திய பாண்டியன் சீமானின் தம்பியைத் தனது குலசாமியாக ஏற்றுக்கொள்கிறான் இது தெரியாத பாண்டியனின் தம்பி சீமானின் தம்பியை வெட்டி விடுகிறான். தம்பி குற்றுயிராக ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடக்க தம்பியின் காதலியும் நண்பர்களும் சோகத்துடன் நிற்கிறார்கள். இவர்களை விடப் படு சோகத்துடன் வில்லனும் வெட்டியவனும் கண்களைக் கசக்கிக்கொண்டு நிற்கிறார்கள்.அப்போது அங்கே தோன்றும் மதியுரைஞர் தம்பியின் காதுகளுக்குள் "தம்பி எழுந்திரு! இன்னமும் பஸ்ஸில் இடித்தபடியே தான் பயணம் செய்கிறார்கள் எழுந்திரு ! நமக்கு இன்னமும் வேலையிருக்கிறது" என்று கூறத் "தம்பி பொழைச்சிட்டான் "...............

மேலேயுள்ளது தம்பி திரைப்படத்தின் கதைச் சுருக்கம் என்று நினைத்துவிடாதீர்கள். தம்பி திரைப்படத்தின் முழுக்கதையும் இதைவிடச் சுருங்கியது, நான் தான் வாசிப்புச் சுவாரசியத்துக்காகக் கதையைச் சற்றே மினுக்கி எழுதியுள்ளேன்.தறுதலை தம்பிக்கும் தாதா பாண்டியனுக்கும் இடையில் நடக்கும் நாய்ச் சண்டையில் தமிழீழ மக்களின் போராட்டம் எங்கே வருகிறது ?காதலை ஏற்றுக்கொண்டவுடன் தம்பியின் கால்களில் காதலி விழுந்து தொழும் அசிங்கமான திரைப்படத்தில் ஈரோட்டுச் சிங்கத்துக்கு என்ன வேலை ?இந்த வெங்காயச் சினிமாவை வீரமணி, கொளத்தூர்மணிக்குக் கூட அர்ப்பணிக்க முடியாதே ? இதை எந்தத் துணிச்சலில் சீமான் பெரியாருக்கு அர்ப்பணிக்கிறார் ?

"தமிழ்த் திரைப்படங்களை குறித்துப் பேசுவது சிரங்கைச் சொறிந்து கொடுப்பதைப் போன்றது" எனப் பேராசிரியர் சிவசேகரம் ஒருமுறை எழுதியதாக நினைவு. பேராசிரியர் விரக்தியின் விளிம்பில் நின்று இதை எழுதியிருந்தாலும் கூட தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நேர்மறைப் பண்புகளும் இல்லாமல் இல்லை. திராவிட இயக்கத்தினரின் திரைப்படங்களும் 'பாதை தெரியுது பார்', 'ஏழாவது மனிதன்', 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' போன்று மாற்றுத் திரைப்படங்களைக் கண்டடைவதற்கான எத்தனங்களுக்குள்ளால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவை.இது தவிர வணிக நோக்கில் தயாரிக்கப்படும் சனரஞ்சக மனோரதியத் திரைப்படங்களுக்கும் பரந்துபட்ட தமிழ்ப் பார்வையாளர்கள் திரளுக்குமிடையே உள்ள உறவுடன் ரசிக உளவியலும் குறித்த ஒரு உரையாடலை 'நிறப்பிரிகை' சில வருடங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தது. எனினும் அவை குறித்த சிந்தனை வளர்ச்சியும் ஆய்வு முயற்சிகளும், தமிழில் தொடராமலேயே போய்விட்டன. பாடல்கள், நடனங்கள், சண்டைக் காட்சிகள், மிகை உணர்சிகள், போன்ற கேளிக்கைக்கான நேர்மறைக் கூறுகளுடன் நடிகைகளைப் பாலியல் பிரதிமைகளாகக் கட்டமைப்பது, ஆதிக்க சாதிச் சாய்வு,மூடநம்பிக்கைகள், ஆண் மையவாதச் சிந்தனை முறைமை போன்ற எதிர்மறைக் கூறுகளும் சேர்ந்ததாகவே தமிழ்ச் சினிமாவின் பரப்பு இயங்கி வருகிறது. இந்தப் போக்கு தமிழ்ச் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகச் சினிமாவிலும் தொழிற்படும் ஒரு போக்குத்தான். ஆனால் தமிழ்த் திரைப்படத் துறையில் மாபெரும் வணிக வெற்றிகளை சாதித்த இயக்குனர்கள் தமது திரைப்படங்களுக்கு வெளியே புரட்சிகரமான வாய்ச் சொற்களை உதிர்ப்பதில்லை. 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் வெற்றியைக் கத்தாருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கங்கை அமரன் சொன்னதில்லை. 'கப்டன் பிரபாகரன்' படத்தின் வெற்றியை ஈழப்போராளிகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று செல்வமணி சொன்னதில்லை. 'வைஜந்தி அய்.பி.எஸ்' திரைப்படத்தை ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அர்ப்பணிப்பதாக அத் திரைப்படத்தின் இயக்குனர் சொன்னதில்லை, ஆனால் மேற்சொன்ன படங்களையே கருத்துத் தளத்தில் ஒத்ததாக உள்ள தம்பி திரைப்படத்தின் வெற்றியைப் பெரியாருக்கும், பிரபாகரனுக்கும், அர்ப்பணிக்கிறேன் என்று கூறும் சீமானின் வாய்த் துடுக்குக்குப் பின்னால் இருப்பது எது ?

தம்பி திரைப்படத்துக்கு புறத்தே இயக்குனர் சீமான் கட்டமைத்த கட்டமைக்கும் போலிப் புரட்சிகரப் படிமங்களின் பின்னே/ அவர் உதிர்த்தும் கைப்புள்ள, வெடிமுத்து வீர வசனங்களின் பின்னே இயங்கும் சின்னத்தனமான அரசியலின் வியாபார இலக்கு எது ? அந்த வியாபாரத்தின் அரசியல் என்ன ? இந்தக் கேள்விகளைப் பரிசீலிப்பதற்கு முன்னதாக தம்பி படத்தின் திரைக்கதை வசனத்தைப் பற்றியும் அவற்றுள் பொதிந்திருக்கும் ஆபத்தான சாதிய ஆண்மையவாத அராஐகக் கூறுகளைப் பற்றியும் பார்த்து விடுவோம்.தம்பி திரைப்படம் பழிக்குப் பழி என்ற வழமையான தமிழ்த் திரைப்பட பாணியிலிருந்து வேறுபட்டது அதனாலேயே அது முக்கியமானது என்று திராவிடப் பாசறையிலிருந்து வரும் 'உண்மை' இதழும் எழுதுகிறது தமிழ்த் தேசியவாதப் பாசறையிலிருந்து வரும் 'தென் செய்தி' இதழும் எழுதுகிறது. என்ன இழவு இது ?எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 130 படங்களில் இந்த கதை தானே நடந்தது ! எழுந்தமானமான எடுத்துக்காட்டாய் கஜேந்திரா பிலிம்ஸின் 'நாளை நமதே" திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம் அன்பே உருவான தாய், அறிவே உருவான தந்தை, சங்கர், விஜே, கண்ணன் என மூன்று குழந்தைகள்! தென்றல் நடைபயின்ற குடும்பத்தில் தீடீரெனப் புகுந்தான் கொள்ளைக்காரன் ரஞ்சித். தென்றல்கள் ஒவ்வொன்றும திசைக்கு ஒன்றாகப் பிரிந்தன. முடிவு என்ன? எம்.ஜி.ஆர் பெரியவனாக வளரவில்லையா? தன் குடும்பத்தையே நாசமாக்கிய நம்பியாரைக் கண்டு பிடிக்கவில்லையா? நம்பியாரைத் தண்டவாளத்தில் ஓடவிட்டுத் துரத்தித் துரத்தி நீதி மொழிகள் பேசவில்லையா நம்பியாரைப் பழிவாங்க எல்லா வாய்ப்புகள் இருந்தும் இறுதியில் எம்.ஜி.ஆர் நம்பியாரின் உயிரைக் காப்பாற்றி சட்டத்தின் கையில் ஒப்புவிக்கவில்லையா? அப்போது நாகேஷ் போலீசாரை ஜீப்பில் அழைத்துக்கொண்டு வரவில்லையா? எல்லாமே நடந்தன. ஒன்று மட்டும் தான் நடக்கவில்லை. இத் திரைப்படத்தின் வெற்றியை அண்ணாத்துரைக்கு அர்ப்பணிப்பதாக எம்.ஜி.ஆர் சொல்லவில்லை......!'தென்செய்தி' இதழில் சுப.வீரபாண்டியன் தம்பி திரைப்படத்தைக் குறித்து எழுதும் போது தம்பியின் வீட்டில் பெரியார், கார்ல் மார்க்ஸ், பாரதிதாசன் படங்கள் தொங்குவதாக மகிழ்ந்து போகிறார். இவையெல்லாம் தம்பியின் உள் வீட்டில் மாட்டியிருந்த படங்கள். ஆனால் தம்பியின் வீட்டின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் -அண்மைக் காட்சிக்குள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வரும் ஒரு புகைப்படம்- எப்படித்தான் பேராசிரின் கண்களுக்குப் படாமல் போனதோ தெரியவில்லை. அம் முகப்பு படத்தில் இருப்பவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மார்க்ஸின் மாணவர்கள், பெரியாரின் பேரர்கள், ஒரு போதும் முத்துராமலிங்கத்தின் படத்தைத் தூக்கிப்பிடிப்பதில்லை. தலித் மக்களின் தலைமைப் போராளி இம்மனுவேல் சேகரனின் படுகொலைக்கு நேரடிக் காரணியாக இருந்தவர் முத்துராமலிங்கம். முத்துராமலிங்கத்தை கைது செய்யுமாறு அப்போது பெரியார் குரல் கொடுத்தார். பின் அவர் கைது செய்யப்பட்டார். முத்துராமலிங்கத்துக்கு அடிப்படைவாத இந்துத்துவ முகமும் உண்டு. இந்து மகா சபைத் தலைவராகவும் முத்துராமலிங்கம் இருந்தார். "ஒரு வேளை இன்று முத்துராமலிங்கர் உயிருடன் இருந்திருந்தால் அவரே இன்றைய தமிழக இந்துத்துவ சக்திகளின் தலைவராக இருந்திருப்பாரோ என்று ஊகிக்கவும் இடமுண்டு" என்பார் அ.மார்க்ஸ் (அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் பக்.107) இன்று தென்மாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையாளர்களாக விளங்கும் முக்குலோத்தரின் சாதிப் பெருமிதப் படிமமாக வரலாற்று நாயகனாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆக முத்துராமலிங்கத்தின் படத்தைத் தம்பியின் வீட்டில் சீமான் மாட்டிவிட்டதற்க்குப் பின்னால் இருப்பது சுய சாதி அபிமானத்தைத் தவிர வேறென்ன? இந்த இடத்தில் இயக்குனர் சீமான் திரைப்படத் துறையினுள் நுழைந்த விதத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

என் ஞாபகம் சரியாக இருந்தால் சீமான் பாரதிராஜாவின் 'பசும்பொன்' திரைப்படத்ததுக்குக் கதை உரையாடல் எழுதித்தான் திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். தமிழ்க் சினிமாவின் மொழியை மாற்றிப் போட்ட வகையிலும் 'கிழக்கே போகும் ரயில்', 'கருத்தம்மா', போன்ற சில படங்களில் சமூகப் பிரச்சனைகளைச் சற்றே ஆழமாகப் பேசியவர் என்ற வகையிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பாரதிராஜாவின் வகிபாகம் முதன்மையானதாக இருக்கிறது. இதற்கு அப்பால் சுயசாதிப் பெருமிதங்களைப் பேசும் படங்களை எடுத்ததோடு மட்டுமில்லாமல் சாதிச் சங்கத்தின் நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர் பாரதிராஜா.சீமான் கதை உரையாடல் எழுதிய பசும்பொன் திரைப்படமும் சுயசாதிப் பெருமைகளைப் பேசிய ஒரு வன்கொடுமைத் திரைப்படம் தான். இத் திரைப்படத்தின் நாயகப் பாத்திரமான துரைராசுத் தேவர் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜி கணேசன் என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. அத் திரைப்படத்தில் தான் "தென்காசிச் சிங்கமே தேவர் அய்யா எங்கள் தேவர் குலத் தங்கமே தேவர் அய்யா" என்ற பாடல் வருகிறது. இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து என்பது கூடுதற் தகவல்."நமது மொழி சாதி காப்பாற்றும்" மொழி என்பார் பெரியார். நமது மொழியின் அடுக்குகளில் சாதி நுட்பமாகப் படிந்துள்ளது. சீமானின் தம்பி திரைப்படத்தில் பாத்திரங்கள் பிற பாத்திரங்களைத் திட்டும் போது 'சண்டாளா' எனத் திட்டுகிறார்கள். படம் நெடுகவும் இந்த சண்டாளா எனற சொற்ப் பிரயோகம் வருகிறது. சண்டாளர் என்பது புராணகள், இதிகாசங்கள் தோன்றிய காலங்களில் இருந்தே தலித்துக்களை இழித்துரைப்பதற்காக ஆதிக்கச் சாதியினர் பயன்படுத்தும் சொல். மதுரை மீனாட்சி கோயில் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்த போது அடையாளமாகப் பறையர், பள்ளர், நாடார் சாதிகளிலிருந்து இரண்டிரண்டு பேர்களென ஆறு பேர்கள் ஆலயத்துக்குள் நுழைந்தனர். 'ஆறு சண்டாளர்கள்' என இவர்களைப் பற்றி 'பகிரதி' என்ற பார்ப்பனப் பெண் வசைப்பாடல் இயற்றிய கொடுமையைத் தமிழவேள் 'இம்மானுவேல் தேவேந்திரர் வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகிறார். இவற்றுக்கு மேலாக சண்டாளர் என்பது இந்தியாவின் அட்டவணைச் சாதிகளுள் உள்ள ஒரு தீண்டப்படாத சாதியின் பெயர் என்பதும் அறிய வருகிறது. இச் சாதியின் பெயரை வசைச் சொல்லாகச் சீமான் தம்பி திரைப்படத்தில் உபயோகித்திருப்பதை திரைப்படத் தணிக்கைக் குழுவினர் எப்படி அனுமதித்தனர் ? தணிக்கைக் குழு அனுமதித்திருப்பினும் உண்மையும் தென்செய்தியும் சுபவீயும் கோவி.லெனினும் எப்படி இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் ? சீமான் சார்ந்திருக்கும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் குஷ்புவிடம் இருந்து மட்டும் தான் தமிழைக் காப்பாற்றுமா ? சாதியிடமிருந்து தமிழைக் காப்பாற்றாதா ?

பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திலும் "கதாநாயகி", கதைக்கு சம்மந்தமில்லாமல் வந்துபோன அறிவுமதி ஆண்டாள் பிரியதர்சினி போலவே அவளும் வந்து போகிறாள். சற்றுக் காலத்துக்கு முன்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிகள் ஜீன்ஸ், பனியன் போன்ற உடைகளை அணியக் கூடாது என்ற ஒரு கலாச்சார அடிப்படைவாத விதி கொண்டுவரப்பட்டதே, அதை மாணவிகள் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ சீமான் செம்மையாகக் கடைப்பிடிக்கிறார். படம் முழுவதும் கல்லூரி மாணவியான நாயகி சேலையிலேயே வருகிறாள். சீமானைப் போல மாதவனைப் போல அவளால் சே குவேரா படம் பொறித்த பனியன் அணிய முடியாது. விரும்பினால் சே குவேரா படத்தைச் சேலையில் பிரிண்ட் போட்டுக்கொள்ள வேண்டியது தான். புரட்சியாளனைக் காதலிக்கும் குற்றத்துக்காக அவள் புரட்சியாளனிடமிருந்து லூசு, இம்சை, பேய் போன்ற வசைகளைப் பெறுகிறாள். கடைசியில் சீமானின் தம்பி காதலை ஏற்றுக் கொண்டதும் அவனின் கால்களில் விழுகிறாள்.முற்று முழுதாக ஆணாதிக்கச் சிந்தனை வழியிலேயே சீமான் நாயகியின் பாத்திரத்தைக் கட்டமைத்திருக்கிறார். வெட்கத்தை விட்டு ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது: கே.பாலச்சந்தர் போன்ற பார்ப்பனப் பிற்போக்குவாதிகள் "அவள் ஒரு தொடர் கதை", "அவர்கள்", "மனதில் உறுதி வேண்டும்", "அச்சமில்லை அச்சமில்லை"," அக்னி சாட்சி",ஆகிய திரைப்படங்களில் அரைகுறையாகவேனும் சித்தரித்துக் காட்டிய பெண் ஆளுமைகளைக் கூட நமது பெரியாரின் பேரர்களாலும் தம்பியின் தம்பிகளாலும் உருவாக்க முடியாமல் உள்ளது.அவர்கள் தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் காலில் விழும் கலாச்சாரத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மாவோவின் மேற்க்கோளோடு தொடங்கி சே குவேரா வின் மேற்க்கோளோடு முடியும் இத் திரைப்படம் முழுவதும் சீமானின் தம்பி கிட்டத் தட்ட ஒரு போலிஸ் உளவாளி போலவே இயங்குகிறான். போலிசார் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சொல்லும் போது போலிஸ் வாகனத்துக்கு முன்னால் தம்பி பாதுகாப்பு அளித்துச் செல்கிறான். போலிசாரும் தம்பி சண்டித்தனம் செய்யும் போது கடைசிவரைக்கும் கண்டும் காணாமலேயே இருந்துவிடுகிறார்கள். வரலாற்றிலேயே இல்லாத புரட்சியாய் பொலிஸ் அதிகாரி (ராஜ்கபூர்)புரட்சியாளனை இரகசியமாகச் சந்தித்துப் சிலபல அய்டியாக்களும் கொடுக்கிறான். "புரட்சியாளன்" தம்பியும் போலிசும் கை கோர்த்துச் செயற்படுகிறார்கள். இவ்வாறாகப் போலிஸாருடன் கரங்களைக் கோர்ப்பவர்களை சனங்கள் புரட்சியாளன் என்று அழைப்பதில்லை, மாறாகப் "போலிஸ் உளவாளி" என்றுதான் காறியுமிழ்வார்கள். இந்தப் படத்துக்காக வீரப்பன் வேட்டை நிகழ்ந்த பகுதிகளிலும் நக்ஸல்பாரிப் புரட்சியாளர்கள் கொடூரமாகப் போலிசாரால் கொன்றொழிக்கப்பட்ட தருமபுரிக் கிராமங்களிலும் வாழும் இரத்த சாட்சியங்களான மக்கள் சீமானைச் செருப்பாலே அடித்தால் அது புரட்சி!

சமூகத்தின் உண்மையான வன்முறையாளர்கள் சீமான் ஆனந்த விகடன் நேர்காணலில் கோபப்படுவது போல சாலையில் குப்பை எறியும் இளைஞர்களோ சாலை விதியை மீறும் எளிய மனிதர்களோ அல்ல. அல்லது சீமான் தம்பி திரைப்படத்தில் சித்தரிப்பது போன்ற பேருந்தில் உரசியபடியே பயணம் செய்யும் பாலியல் வறுமையில் உழல்பவர்களோ தெருச்சண்டியர்களோ அடியாட்களாக இயங்கும் விளிம்பு நிலை மனிதர்களோ அல்ல. அவர்கள் இந்த நிலப்பிரபுத்துவ முதலாளியக் கேடுகெட்ட சமூக அமைப்பின் விளைவுகள். சமூகத்தின் மிகப் பெரும் வன்முறை நிறுவனங்களாக அரசும் நீதிமன்றமும் காவல்துறையும் இராணுவமும், சிறைச்சாலைகளுமே விளங்குகின்றன.அவையே இந்த சமத்துவமற்ற சமூக ஒழுங்குகளையும் சுரண்டலையும் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. இவற்றின் வன்முறை குறித்துத் தம்பி திரைப்படம் பேசுவதில்லை. மாறாகத் தம்பி ஒரு இளைஞனுக்கு "நீயும் நானும் அடித்தால் குற்றம் போலிஸ் அடித்தால் சட்டம்" எனவே நீ படித்து போலிஸ்காரனாகு! கலக்டராகு! சமூகத்தைத் திருத்து" என்கிறான்.'தாகம்' பெப்ரவரி 2006 இதழில் சீமான் தனக்குள் இலட்சியங்களை விதைத்தவர்களான மாவோவும் லெனினும் சே குவேராவும் தம்பி திரைப்படம் முழுவதும் விரவியிருப்பதாகக் கூறுகிறார். மாவோவும் லெனினும் அரசு இயந்திரத்தை நொறுக்குவது குறித்தும் அரசின் காவல் நாய்களான அதிகாரிகளையும் ஆயுதப்படையினரையும் செயலிழக்கச் செய்வது குறித்தும்தான் பேசுவார்கள். அவர்கள் புரட்சியாளர்களாக மாறச் சொன்னார்களே ஒழிய பொலிஸ்காரர்களாக மாறச் சொல்லவில்லை. " நீதி என்பது அரசின் வன்முறை- வன்முறை என்பது மக்களின் நீதி" என்பதே சர்வதேசிய அனார்கிஸ்டுகளிள் முதல் முழக்கமாய்த் திகழ்கிறது. அரசுக் கட்டுமானம், நீதியின் வன்முறை, வெகுசனங்களின் கலகம் போன்ற நுண் அரசியற் சிந்தனைகள் சே குவேராவின் பனியனைப் போட்டுக்கொண்டு கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றித் திரிவதாலோ அல்லது பிரபாகரனின் படத்தைச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அலைவதினாலோ சித்தித்துவிடப் போவதில்லை.இயக்குனர் சீமான் குத்துமதிப்பாய் மார்க்ஸிஸம் மாவோயிஸம் என அரைகுறையாய்ப் அனர்த்துவதை நிறுத்திக்கொண்டு, குறைந்தபட்சம் அவர் அவரின் இன்னொரு தோழரான தியாகு எழுதிய 'மார்க்சியம் ஆனா ஆவன்னா' என்ற நூலையாவது படிக்க வேண்டும். 'சொல்வது தெளிந்து சொல்லவேண்டும்.'

லெனினையும் பெரியாரையும் பாரதிதாசனையும் புகைப்படங்களாகத் தமிழ்த் திரையில் முதலில் காட்டியவர் சீமான் என்ற சிந்தனையாளன் தான் என்று சிறுபிள்ளைத்தனமாக சுப.வீரபாண்டியன் மகிழ்ந்து போவதில் எந்த அர்த்தமும் இல்லை. எம்.ஜி.ஆர் கூடத்தான் உலகம் சுற்றும் வாலிபனில் லெனின் சிலையை காண்பிக்கிறார்.பாரதிதாசனைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் புத்தரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் பேசாததையா சீமான் பேசிவிட்டார் ? எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படத்தில் நாடோடி ஆட்சியில் அமர்ந்தவுடன் கொண்டு வரும் சட்டத் திருத்தங்களில் அரைவாசி கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பார்கள். வணிக இலக்குகளுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குள் இவ்வகையான போலிப் புரட்சிகரப் படிமங்களும் உணர்ச்சி முழக்கங்களும் எழுப்பப்படுவதற்க்கான நோக்கம் வியாபாரக் காரணங்களைத் தவிர வேறில்லை.தம்பி திரைப்படத்தைப் போலவே 1981 ல் போலிப் புரட்சிகர முழுக்கங்களுடன் ஏ.வி.எம் தயாரிப்பில் 'சிவப்பு மல்லி' என்றொரு திரைப்படம் விஐய்காந்த்,சந்திரசேகர் நடிப்பில் வெளிவந்தது. அத் திரைப்படத்தின் போலி முழக்கங்களுக்குப் பின்னால் இருந்த வணிக உத்திகளை அறந்தை நாராயணன் 'தமிழ் சினிமாவின் கதை' என்ற நூலில் விமர்சிக்கிறார். இந்த விமர்சனம் 'நாடோடி மன்னனுக்கும்' பொருந்தும், 'உலகம் சுற்றும் வாலிபனுக்கும்' பொருந்தும், 'அன்பே சிவத்துக்கும்' பொருந்தும், நம் சீமானின் தம்பிக்கும் பொருந்தும். கீழே வருவது அறந்தை நாரயணின் 'சிவப்பு மல்லி' குறித்த விமர்சனம்:

1980 ல் ஏ.வி.எம் கூட்டத்திலிருந்து மெய்யப்பச் செட்டியாரின் மைந்தர்கள் 'முரட்டுக்காளை' என்றொரு பிரமாண்டமான பொழுதுபோக்குப் படத்தை வெளியிட்டனர். அது நடந்து கொணடிருந்த போது ஆந்திராவில் ஒரு தெலுங்குப் படம் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. அந்தப் படம் 'எர்ரமல்லி'. ஆந்திர மாநிலக் கம்யுனிஸ்டுகள் உருவாக்கிய படம். சகோதரர்கள் அந்தப் படத்தைப் பார்த்தனர் சிக்கனமான செலவில் தயாரிக்கக் கூடிய 'ப்ருவ்ட் சப்ஐக்ட்' என்பதை உணர்ந்தனர். தேசமெங்கும் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியால் அமைதியின்மையும் வாழ்க்கை நெருக்கடியும்... அதனை எதிர்த்து விவசாயிகள் தொழிலாளிகள் இளைஞர்கள் மாணவர்கள் மத்தியதர வர்க்கத்தினர் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் புறச் சூழ்நிலை. இதன் எதிரொலியாக அமிதாப்பச்சன் நடிக்கும் இந்தி மசாலாப் படங்களிலும் -ஏன் ரஜினிகாந்த் நடித்த தமிழ் 'காளி' படத்தி லும் - போராட்டக்கார இளைஞன் கம்யுனிஸ்டாகவும் கையில் செங்கொடி பிடிப்பவனாகவும் படங்களில் வரத் தொடங்கியிருந்தான். எர்ரமல்லி ப்ரூவ்ட் சப்ஜெக்டை ஏ.வி.எம் சகோதரர்கள் வாங்கினர். தமிழுக்கு தகுந்த மாதிரி திரைக்கதை எழுத வைத்து 'சிவப்பு மல்லி' என்ற படத்தை 1981 ல் வெளியிட்டனர். தமிழ்ப் படத்துக்கு வசனம் எழுதி இயக்கியவர் இராம.நாராயணன் . நிலப்பிரபுத்துவத்தையும் முதாலாளித்துவத்தையும் எதிர்த்து எழுந்த இரு கோபம் கொணட இளைஞர்களின் கதை. கடிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிச் சுரண்டும் முதலாளி அவனுக்கு நல்லவளான ஒரு மனைவி கோமாளிகளான மூன்றுநிலப்பிரபுகள். நிலப்பிரபுவுக்கு ஒரு மகள்.... என்று தமிழில் (மாற்றப்பட்ட) திரைக்கதை. வண்ணத்தில் நூற்றுக்கணக்கான கம்யுனிஸ்ட் கட்சிக் கொடிகள், ஊர்வலத்தில் லெனின் படம் கூடவே பெரியார், அண்ணாத்துரை படங்கள். கம்யுனிஸ்ட் கட்சிக் கொடிகளையும், சில வசனங்களையும் நீக்கி விட்டால் 'சிவப்பு மல்லி' - ஒரு எம்.ஜி.ஆர் பாணிப்படம்; அபாரமான வசூல். (தமிழ் சினிமாவின் கதை பக்:714)

தம்பி திரைப்படத்திலும் இரு மேற்கோள்களையும் ஒரு வசனத்தையும் நீக்கி விட்டால் சீமானின் தம்பி அசலான விஜயக்காந் பாணிப்படம். இராம.நாராயணனுக்கு 'முரட்டுக்காளையை' தயாரித்த ஏ.வி.எம் நிறுவனமென்றால் சீமானுக்கு 'ஜீன்ஸ்' படத்தைத் தயாரித்த முரளி மனோகர். ஏ.வி.எம்மும் இராம.நாராயணனும் சேர்ந்து தமிழ்த் தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள் என்றால்; முரளி மனோகரும் சீமானும் தமிழகத் தமிழர்களுடன் சேர்த்து ஈழத் தமிழர்களின் தலையிலும் மிளகாய் அரைக்கிறார்கள்....இன்று புலம் பெயர்ந்த தேசங்களில் ஏறக்குறைய பத்து இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களே தமிழ்த் திரைப்படங்களின் வருவாயில் கணிசமான பகுதியைத் தீர்மானிப்பவர்களாக விளங்குகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஈழத்தமிழர்களின் சினிமாக் கிறுக்கு மற்ற எந்த தேசிய இனத்தவர்களின் சினிமாக் கிறுக்கை விடவும் சற்றும் குறைந்ததல்ல. 'காதலுக்கு மரியாதை' 'ஆட்டோ கிராப்' போன்ற கிறுக்குத்தனமான திரைப்படங்களை புகலிடங்களில் பெரும் வெற்றியோடு ஓட வைத்தவர்கள் இவர்கள். பாரிஸ் நகரத்தில் இதுவரை திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிக காட்சிகள் ஓடிய திரைப்படம் 'கப்டன் பிரபாகரன்'. அந்தப் பெயருக்காகவே அத் திரைப்படம் ஓட்டமாக ஓடியது. இதே வணிக உத்தியோடு இப்போது சீமானின் தம்பி திரைப்படமும் புகலிட தேசங்களில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

தமிழீழ விடுதலைப் போராளிகளின் தலைமைகள் மீதும் அவர்களின் குறுந் தேசியவாதப் பண்புகளின் மீதும் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன என்பதற்காகச் சிங்களப் பேரினவாத அரசுகளின் இன அழிப்புக் கொடுமைகளையும் ஈழப் போராட்டத்தின் தோற்றுவாய்க்கான நியாயமான காரணிகளையும் போராட்டத்தில் ஏராளமான மக்களும் அடிமட்டப் போராளிகளும் செய்த வீரஞ் செறிந்த தியாகங்களையும் நாம் மறந்து விடப் போவதில்லை. ஈழப் போராட்டத்துக்கு தமிழகத் தோழர்கள் செய்த பங்களிப்புகளும் அளப்பெரியன. அத் தோழர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக தீயில் எரிந்தார்கள். மாணவர்களும் இளைஞர்களுமாகத் திரண்டு ஈழ அகதிகளுக்குப் பெரும் உதவிகளைச் செய்தார்கள். பல தோழர்கள் ஈழப் போராட்டத்தின் நியாயங்களைப் பரப்புரை செய்வதையே தமது வாழ்நாள்ப் பணியாகக் கொண்டார்கள். பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்று ஈழத்தில் களப் போராளிகளாகவும் சில தமிழகத் தோழர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஈழப் போராட்டத்துக்கு பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்ததால் எண்ணுகணக்கற்ற தோழர்கள் சிறைக் கொட்டடிகளில் ஆண்டு கணக்காக அடைக்கப்பட்டார்கள். வாக்கு, மனம், காயம் எனச் சகலத்தையும் தமிழ்ப் போராட்டத்துக்கு ஒப்படைத்த சில தோழர்கள் சகோதரப் படுகொலைகளைத் தொடர்ந்து விரக்தியடைந்து தோழர் பாவரசுவைப் போல மனநோயாளிகளாக மாறிக் காணாமலேயே போய்விட்டார்கள். ஆக இவை எல்லாம் சேர்ந்தது தான் ஈழப்போராட்டத்தின் வரலாறு.

இன்று ஈழ விடுதலைப் போரட்டம் குறுந் தேசிய வெறியாலும் கலாச்சார அடிப்படைவாதத்தாலும் ஏகாதிபத்திய அடிபணிவாலும் பாஸிஸத்தாலும் திசை தவறிப் போயிருக்கலாம் . ஆனால் ஈழப் போராட்டத்தின் தோற்றுவாய்க் காரணங்களாய் அமைந்த இன ஒடுக்குமுறைக் காரணிகள் அப்படியே தான் இருக்கின்றன. அரசியல், இராணுவ முட்டுச் சந்துகளில் அகப்பட்டிருக்கும் ஈ ழவிடுதலைப் போராட்டத்தைச் சனநாயகப் படுத்துவதும் பாஸிஸத்தைத் தோற்கடிப்பதுவுமே ஈழப் போராட்டத்தை அடுத்த படியை நோக்கி நகர்த்தும் வழியாக இருக்கும். இத்திசை நோக்கி நகர்வதே சமூகப் போராளிகளின் அக்கறையாக இருக்கும். ஆனால் தமிழீழ விடுதலையின் ஆதரவாளராகச் சொல்லப்படும் திரைப்பட வியாபாரி சீமானுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. அவர் பிரபாகரன் எனற தனிமனிதனையே ஈழப்போராட்டமாக உருவகித்து பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் பேட்டிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். புறநானூற்றின் நிகழ்காலம பிரபாகரன் என்று அவர் தனிமனிதத் துதியைப் பாடிக் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் ஆதரவு, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், பெரியார், அம்பேத்கர் என்று சொற்க் குவியல்களை உதிர்ப்பதின் மூலம் அவர் ஊடகங்களில் - குறிப்பாகப் புலம்பெயர் ஊடகங்களில் - தன்னை எப்போதும் தக்க வைத்துக் கொள்கிறார். இதனூடாக அவர் தனது வணிக வலையைக் கவனமாகப் பின்னுகிறார்.சீமானின் வணிகப் புத்தி மிகவும் வெளிப்படையானது. தம்பி திரைப்படத்தில் நடிப்பதற்கு மாதவனைத் தவிர எந்த நடிகர்களும் தயாராக இருக்கவில்லை என்று அவர் வியாபார மதிப்புள்ள உச்ச நட்சத்திரங்களைக் குறித்துப் புலம்புகிறார். 'பாதை தெரியுது பார்' இயக்குனர் நிமாய்கோசும் 'ஏழாவது மனிதன்' இயக்குனர் ஹரிகரனும் 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' இயக்குனர் சிறீதர் ராஜனும் உச்ச நட்சத்திரங்களின் தேதிகளுக்காகச் சீமானைப் போல புலம்பவில்லை. அவர்கள் புது முகங்களையும் வணிக மதிப்பற்ற நடிகர்களையும் வைத்தே காலத்தால் அழியாத திரைப்படங்களை உருவாக்கிக் காட்டினார்கள். ஆனால் சீமானோ சே குவேரா பனியனை அணிந்து நடிக்க மாதவனைத் தவிர எந்தத் தமிழ் நடிகனுக்கும் துணிவில்லை எனறு பழித்துப் பேசிய அதே நாவால்தான் தனது அடுத்த படத்தில் விஜய் அல்லது விக்ரம் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ஆனந்த விகடன் ஊடாக உச்ச நட்சத்திரங்களிடம் மனுக் கொடுக்கிறார்.

அம்ஸ்ரர்டாமில் கஞ்சா விற்கும் கோப்பிக் கடைகளின் முகப்பில் பொப் மார்லியின் உருவத்தை வணிக இலச்சினையாகப் பொறித்திருப்பார்கள். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பனியன்களில் சே குவேராவின் உருவத்தை அச்சிட்டுச் சந்தைப்படுத்துவார்கள். அதே போல் இயக்குனர்சீமானுக்குத் தனது திரைப்படத்தைச் சந்தைப்படுத்த பிரபாகரன் ஒரு வியாபார இலச்சினை.ஈழப் பிரச்சினை அவருக்கு ஒரு 'ப்ரூவ்ட் சப்ஜெக்ட்'.இலங்கையில் நடைபெறும் யுத்தத்தால் ஆதாயம் அடைபவர்கள் பலர். ஆயுத வியாபாரிகள், அரசுத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் ஒரு புறம் யுத்தத்தின் பெயரால் நிதியைச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் தமிழ்த் தேசியத்தை முழக்கமிடும் பத்திரிகைகள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், அறிவு ஜீவிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் திட்டமிடலாளர்கள், தமிழ்த் தேசியத்தின் வெளிநாட்டு முகவர்கள், கோயில் முதலாளிகள் போன்றவர்களும் ஈழப் போரட்டத்தின் பெயரால் பெரும் பொருளியல் ஆதாயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இயக்குனர் சீமானும் தன் பங்குக்கு வாய் நனைக்க வந்துள்ளார். ஆற்றிலே போற வெள்ளம் அண்ணே குடி!தம்பி குடி!!

ஷோபாசக்தி25.03.2006

Wednesday, August 16, 2006

அடிமைகளைக் காண வந்த எஜமானன்


எஸ்.வி.ராஜதுரை


நாடாளுமன்ற அரசியலின் சம்பிரதாயப் பொதுத் தேர்தல் முழக்கங்கள் நமது காதுகளைச் செவிடாக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சென்ற மார்ச் மாதம் இலட்சக்கணக்கான இந்திய மக்களின் எதிர்ப்புக் குரல்களைப் பொருட்படுத்தாது, வெற்றிப் பெருமிதத்துடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் கூறியதை நினைவு கூரல் அவசியம். “பெட்ரொலியப் பொருட்களைப் பெற உலகம் முழுவதிலும் நடைபெறும் போட்டாபோட்டிகளிலிருந்து இந்தியாவை விலகச் செய்வதற்காகவே அதனுடைய எரிசக்தித் தேவைக்கான அணுச்சக்தித் தொழிலை அந்த நாடு பெறுவதற்கு உதவுகிறோம். எங்களது பொருளாதார நலன்களின் பொருட்டே இதைச் செய்கிறோம். பெட்ரோலியப் பொருட்களுக்கான இந்தியாவின் தேவையை எந்த அளவுக்குக் குறைக்கிறோமோ அந்த அளவுக்கு அது அமெரிக்க நுகர்வாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்’’.அணுச் சக்தி தொடர்பாக புஷ்ஷ¥டன் மன்மோகன் சிங் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு முன் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல், இராஜதந்திர மாற்றங்களை நாம் குறித்துக்கொள்ள வேண்டும்:1.சென்ற ஜனவரி -பிப்ரவரியில் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யரிடமிருந்து பெட்ரோலிய அமைச்சகம் பறிக்கப்பட்டு, முரளி தேவ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. எண்ணெய் வளமிக்க மத்தியக் கிழக்கு நாடுகள் கிட்டத்தட்ட அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டு அந்த வளம் கணிசமாக உள்ள ஈரானையும் வெனிஸ¥லாவையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவின் எரிசக்தித் தேவையை நிறைவு செய்ய மாற்றுவழிகளைத் தேடியவர் மணி சங்கர் அய்யர். ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாகக் குழாய்கள் மூலம் இயற்கை வாயுவைக் கொண்டுவரும் திட்டத்தைத் தீட்டியதுடன், சீன, இந்திய அரசாங்கங்களின் கட்டுப்பாட்டிலுள்ள பெரும் எண்ணெய் நிறுவனங்கள் சிரியாவிலுள்ள எண்ணெய் நிறுவனங்களில் கூட்டாகப் பங்குகள் வாங்கவும் அவற்றுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளவும் முயற்சி மேற்கொண்டார். மேலும், மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனங்களையே இந்தியா எப்போதும் சர்ந்திருக்கும் நிலைமையை மாற்ற, 'ஆசிய எண்ணெய்த் தொகுப்பு ஏற்பாடு' (கிsவீணீஸீ ளிவீறீ நிக்ஷ£வீபீ) உருவாக்கவும் முயன்றார். இது இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தைச் சேர்ந்த சிறு பிரிவினருக்கு ஏற்புடையதாக இருந்தபோதிலும், மேற்கு நாட்டு எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தின் பெரும்பகுதியினருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. எனவே வெளிப்படையான அமெரிக்க சார்பாளரும் தீவிர வலதுசாரியுமான முரளி தேவ்ராவிடம் பெட்ரொலிய அமைச்சகம் ஒப்படைக்கப்பட்டது.2.சென்ற ஜனவரியில் சவூதி மன்னர் அப்துல்லா இந்தியாவிற்கு வருகை தந்தார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவிற்கு முதன் முதலில் வருகை தந்த சவூதி அரேபிய மன்னர் இவர்தான். இந்தியாவுடன் சவூதி அரேபியா மிக நெருக்கமான தொடர்புகொள்ள விரும்புவதாகக் கூறிய அவர், 'இஸ்லாமிய நாடுகளின் அமைப்பில்'(Organization of Islamic Countries-OIC) இந்தியா பார்வையாளர் அந்தஸ்து பெறத் தனது நாடு ஒத்துழைக்கும் என உறுதியளித்தார். இந்தியாவின் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட அவரது குடும்பம், மத்தியக்கிழக்கில் அமெரிக்காவின் கைக்கூலியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.3.கடந்த ஆண்டு நவம்பரில் 'வோல்கர் ஆணையத்தின் அறிக்கை' என்னும் பெயரில் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்குப் பணிந்து ஐ.நா.அவை ஒரு அறிக்கை தயாரித்தது. சதாம் உசேன் ஆட்சியின் போது ஐ.நா.சபையால் ஈராக்கின்மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை 'மனிதாபிமான நோக்கத்தின்' பொருட்டுத் தளர்த்தப்பட்டு ஈராக் தனது எண்ணெயில் ஒரு சிறு பகுதியை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்தியாவிற்கு எண்ணெய் விற்கப்பட்டதில் கையூட்டு பெற்றவர்களில் ஒருவராக வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்கின் பெயரும் போதுமான ஆதாரங்கள் ஏதுமின்றி அந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தது. அப்படியே அவரோ பிறரோ கையூட்டு பெற்றிருந்தாலும், பொருளாதாரத் தடையை விதித்த ஐ.நா.பாதுகாப்பு அவைதான் அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்க வேண்டும். மேலும், அந்தப் பொருளாதாரத் தடையின் காரணமாக ஈராக்கில் இலட்சக்கணக்கான குழந்தைகளும் கர்ப்பிணிகளும் இன்றியமையா உணவுப் பொருட்களும் மருத்துவ வசதிகளும் கிடைக்காமல் மாண்டுபோனதற்குக் காரணமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொலைபாதகச் செயலை ஒப்பிடுகையில், நட்வர் சிங் போன்றவர்கள் கையூட்டு வாங்கியிருந்தாலும் அது ஒருவகையில் மனிதாபிமானச் செயல்பாடு என்றே கருதப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்தியா ஈராக்கிடமிருந்து எண்ணெய் வாங்கியதால், சில ஆயிரம் குழந்தைகளேனும் காப்பாற்றப்பட்டிருக்கக்கூடும். ஆனால் ,மன்மோகன் சிங் அரசாங்கமோ, அமெரிக்காவின் நிர்பந்தத்திற்குப் பணிந்து நட்வர் சிங்கை முதலில் வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்தும், பின்னர் அமைச்சரவையிலிருந்துமே பதவி விலகுமாறு செய்தது.4.2003ம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் வெளியுறவுத் துணை அமைச்சர் ரிச்சர்ட் அர்மிடேஜ் சில மூத்த அமெரிக்க அதிகாரிகளுடன் இந்தியத் துணைக்கண்டத்திற்கு வருகை புரிந்தார். தென்னாசியப் பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியாவில், அமெரிக்காவின் செல்வாக்கை வலுப்படுத்துவதுதான் அந்த வருகையின் நோக்கம். அர்மிடேஜ் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்த அதேவேளை, அப்போதைய 'தேசிய ஜனநாயகக் கூட்டணி' அரசாங்கத்தால் 'தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக' நியமிக்கப்பட்டிருந்த பிரஜேஷ் மிஸ்ரா, அமெரிக்காவுக்குச் சென்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கோண்டலீஸ்ஸா ரைஸ¤டன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவின்' முக்கியத்துவம்' கருதி ஜார்ஜ் புஷ்ஷ¥ம் மிஸ்ராவை அழைத்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாகத்தான் 2003 ஜூன் மாதம் இந்தியத் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி அமெரிக்கா சென்றார்.இந்தியத் துணைக்கண்டத்தில் எலியும் பூனையுமாக இருக்கும் பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளையும் தனது கூட்டாளிகளாக வைத்திருக்க அமெரிக்க விரும்பும்போதிலும், அது இந்தியாவின் மீதே கூடுதலான அக்கறை கொள்ளத் தொடங்கியதை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமுள்ள சர்ச்சைகள்- குறிப்பாக காஷ்மீர் -தொடர்பாக அர்மிடேஜ் கூறிய கருத்துகள் உறுதிப்படுத்தின. காஷ்மீரில் 'எல்லைதாண்டிய பயங்கரவாதச் செயல்களை' மேற்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு எவ்வகையிலும் ஆதரவு தருவதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என இஸ்லாமாபாத்தில் எச்சரிக்கை விடுத்த அர்மிடேஜ், புதுடில்லி வந்து சேர்ந்ததும் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் வாஜ்பாயியின் 'இராஜதந்திரத்தை' வெகுவாகப் புகழ்ந்தார். இத்தனைக்கும், அன்றைய இந்திய அரசாங்கம், காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தடுக்க பாகிஸ்தான் மீது முன்னறிவிப்பு இல்லாத போரை நடத்தப் போவதாக அப்போது கூறியிருந்தது.காஷ்மீரைச் சொந்தமாக்கிக் கொள்வதற்காக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் 1948இல் நடந்த முதல் யுத்தத்திற்குப் பிறகு, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் சேர விரும்புகிறார்களா அல்லது பாகிஸ்தானுடன் சேர விரும்புகிறார்களா என்பதை முடிவு செய்ய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என 1949இல் ஐ.நா.சபை தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்தை முதலில் ஏற்றுக்கொண்ட இந்தியா சில ஆண்டுகளுக்குப் பிறகு 'எல்லைப் பாதுகாப்பு' கருதி அதை ஏற்க மறுப்பதாகக் கூறிவிட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேர்ந்துவிடும் என இந்திய ஆட்சியாளர்கள் கருதியதால்தான் ஐ.நா .தீர்மானத்தை எதிர்க்கத் தொடங்கினர். இதே காரணம் கருதியே பாகிஸ்தான் அத்தீர்மானம் நடைமுறைபடுத்தப்பட் வேண்டும் என மிக அண்மைக்காலம் வரை இடைவிடாது வற்புறுத்தி வந்தது (உண்மையில், அப்படி ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தினால், காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருக்கவே விரும்புவார்கள் என்பதுதான் உண்மை.)பாகிஸ்தானின் நிலைப்பாட்டையே அமெரிக்காவும் ஆதரித்து வந்தது.ஆனால், 2003ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் தங்களது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டன. 1`949ம் ஆண்டு ஐ.நா.தீர்மானத்தைத் இனிமேல் ஆதரிக்கப் போவதில்லை என பாகிஸ்தான் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்னும் போதிலும், 2003மே மாதம் ஐ.நா.பாதுகாப்பு அவைத் தலைமைப் பதவியை சுழற்சிமுறையில் பெற்ற ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர், அந்தத் தீர்மானம் பற்றிய பேச்சையே எடுக்காததுடன், காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினார். இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவை உருவாக்கத் தொடங்கிய அமெரிக்காவும் அத்தீர்மானம் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டது. வாஷிங்டனைத் திருப்திப்படுத்த, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் 'ஆசாத் காஷ்மீரில்' நடந்த பேரணியொன்றில் கலந்து கொள்ள ஜெய்ஷ் -இ-முகமது' என்னும் தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு அனுமதி கொடுக்க மறுத்ததன் மூலம் ஜெனெரல் முஷார•பின் அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டது! (இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது 2001 டிசம்பரில் தாக்குதல் நடத்திய இரண்டு அமைப்புகளில் ஜெய்ஷ்- இ- முகமது என்னும் அமைப்பும் ஒன்று எனக் கருதப்படுகிறது.)காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாகிஸ்தான் தந்த மேற்சொன்ன 'சலுகை'களுக்குப் பதிலாக, பாகிஸ்தானுக்குத் தான் கொடுத்த மொத்தக் கடன்களில் 1.8பில்லியன் டாலர் வரை இரத்து செய்வதாக அமெரிக்கா வாக்களித்தது. இஸ்லாமாபத்திலிருந்து புதுடில்லி வந்த அர்மிடேஜ், வாஜ்பாயி, அத்வானி, வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சின்கா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் சின்கா, பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருப்பதால்தான் ஈராக் மீது படையெடுத்ததாக அமெரிக்கா சொல்லும் நியாயவாதங்களை விட அதிகமான நியாயவாதங்கள் முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தான் மீது படையெடுக்க விரும்பும் இந்தியாவிடம் இருக்கிறது எனக் கூறியிருந்தார். ஆனால், 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை' கட்டுப்படுத்த வேண்டுமென அமெரிக்கா பாகிஸ்தானை எச்சரிக்கத் தொடங்கியதும், சின்கா அடக்கி வாசிக்கத் தொடங்கினார். அர்மிடேஜ் தன் பங்கிற்கு வாஜ்பாயியின் 'இராஜதந்திரத்தை'ப் புகழ்ந்ததுடன், அமெரிக்கா ஈராக் விவகாரத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தபோதிலும், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவே தன்னை புஷ் அனுப்பி வைத்ததாகக் கூறினார். வாஷிங்டனில் புஷ்ஷிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிரஜேஷ் மிஸ்ராவும் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்குமுள்ள நட்பை ஆழப்படுத்த வேண்டும் என புஷ் விரும்புவதாகக் கூறினார். இந்தப் பேச்சுவர்த்தைகளின்போதுதான் அமெரிக்க- இந்திய வர்த்தகம், அமெரிக்கத் தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குதல், இராணுவ நோக்கத்திற்கல்லாத அணுசக்தித் தொழிலில் ஒத்துழைப்பு ஆகியன விவாதிக்கப்பட்டன. இவை அனைத்துமே, 1998இல் போக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட அல்லது வரம்புக்குட்படுத்தப்பட்ட விஷயங்களாக இருந்து வந்தன.காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதற்குப் பிரதியுபகாரமாக, இந்தியாவை தனது நெருக்கமான இராணுவக் கூட்டாளியாக்கிக் கொள்ள அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி இப்படித்தான் தொடங்கியது. தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது முழுமையான தலையீட்டை உருவாக்கிக்கொள்ளும் திட்டத்தின் பகுதியே இது.' அமெரிக்க யூதக் குழு' (American Jewish Committee) என்னும் அமைப்பின் கூட்டமொன்றின் பேசிய பிரஜேஷ் மிஸ்ரா, 'பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்' அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் ஆகியன கூட்டணி அமைக்க வேண்டும் என்றார். இதற்கிடையே இந்திய இணையதளங்களிலொன்றான rediff.com இந்திய அமெரிக்க இராணுவ உறவுகள் குறித்த ஒரு ஆவணமொன்றை வெளியிட்டது. அமெரிக்க இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்த ஆவணம் கூறிய முக்கிய செய்திகள்: 1.ஆசியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மத்தியக் கிழக்கையும் கிழக்கு ஆசிய நாடுகளையும் இணைக்கும் கடல் வழிப்பாதைகள் இந்தியக் கடற்கரையோரம் உள்ளன. எனவேதான் அமெரிக்க இராணுவத்தை இந்தியா கவர்ந்திழுக்கிறது; 2.அமெரிக்கக் கப்பற்படைக்கு, உலகின் எதிர்திசையில் உள்ளதும் மத்தியக் கிழக்கில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவக்கூடிய துறைமுகங்களைக் கொண்டதுமான ஒப்பீட்டு நோக்கில் நடுநிலையான நாடு ஒன்று தேவைப்படுகிறது. இந்தியாவிடம் நல்ல அகக்கட்டுமானம் இருப்பது மட்டுமின்றி, அமெரிக்கப் போர்க் கப்பல்களைப் பழுதுபார்க்கவும் அவற்றுக்கு எரிபொருளை நிரப்பவுமான ஆற்றல் இந்தியக் கப்பற்படையிடம் இருக்கிறது. அதேபோல, மத்தியக் கிழக்கில் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும்போதும், இந்திய விமானத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க விமானப் படை விரும்புகிறது.இந்தியாவுடன் அமெரிக்கா கூட்டணி உருவாக்க விரும்புவதன் நோக்கங்கள்:1. மத்தியக் கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல்; 2.சீனாவின் வளர்ச்சியையும் பலத்தையும் குறைக்க இந்தியாவைப் பயன்படுத்துதல். Foreign Policy in Focus என்னும் அமெரிக்க ஏடு 2003ம் ஆண்டு வெளியிட்ட 'அமெரிக்காவும் இந்தியாவும்:அபாயகரமான கூட்டணி' என்னும் கட்டுரையில், மேற்சொன்ன நோக்கங்கள் கருதி மலாக்கா நீரிணையில் அமெரிக்க- இந்தியக் கப்பற்படைகள் கூட்டாக ரோந்துப் பணிகளில் ஈடுபடுதல், இராணுவப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பு, ஏவுகணைகளைப் பயன்படுத்துதல் ஆகியனவற்றை உள்ளடக்கும் வகையில் அமெரிக்க -இந்திய இராணுவப் பிணைப்புகள் விரைவாக உருவாகி வருவதைச் சுட்டிக் காட்டியது. அமெரிக்க இராணுவ ஆவணமொன்று, எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பொருளாதாரரீதியாகவும் இராணுவரீதியாகவும் சவாலாக உருவாகிவரும் சீனா எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அரசியல் ஆலோசகரொருவர் கூறியதை இந்தக் கட்டுரை மேற்கோள் காட்டியது.அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலகளாவிய மேலாதிக்கத்திற்கு இந்தியாவை ஒரு கருவியாகப் பயன்படுத்த விரும்பியது என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தலைமைப் பொறுப்பு வகித்த பாரதிய ஜனதாக் கட்சியோ 'இஸ்லாமிய' பாகிஸ்தானை நசுக்கவும் இந்துக்களின் மேலாதிக்கத்தை நிறுவவும் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு பயன்படும் எனக் கருதியது. எனினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்திய ஆளும் வர்க்கங்கங்களின் இரு முதன்மையான அரசியல் கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரண்டுமே ஒரு முதன்மையான நோக்கத்தில் ஒன்றுபடுகின்றன. உலகச் சந்தையில் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு ஒரு கணிசமான பங்கை உத்திரவாதம் செய்து கொள்வதற்காக இந்தியாவை அமெரிக்காவின் இளங்கூட்டாளியாக்கிவிட வேண்டும்.5. இதை உத்திரவாதம் செய்வதற்காகத்தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்க வெளியுறவு அமைச்சராகப் புஷ்ஷால் பதவி உயர்வு தரப்பட்ட கோண்டலீஸ்ஸா ரைஸ் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டு, இந்தியாவை ஒரு வல்லரசாக ஆக்குவதற்கு அமெரிக்கா உதவி செய்யும் என்னும் உறுதிமொழியை வழங்கினார்.6. 'ஜனநாயக முற்போக்குக் கூட்டணி' அரசாங்கத்தின் பிரதமர் மன்மோகன் சிங் சென்ற ஆண்டு ஜூலையில் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம் இந்தியா முற்றிலுமாக அமெரிக்கா பக்கம் சாய்ந்து வருவதை உறுதிப்படுத்தியது. வாஜ்பாயி ஆட்சியின்போதுகூட சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்தன. உலகின் எண்ணெய் வளங்கள் அனைத்தின் மீதும் அமெரிக்கா முழுக் கட்டுப்பாடு செலுத்துவதைத் தடுப்பதற்காகவும் தங்களுடைய எரிசக்தித் தேவையை நிறைவு செய்து கொள்வதற்காகவும் சீனாவும் ரஷ்யாவும் உருவாக்கிய '"ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில்' (Shanghai Cooperation Organization) சேர்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மன்மோகன் சிங், இந்தியாவை இந்த அமைப்பில் சேர்ப்பதற்குத் தயக்கம் காட்டி வந்த போதிலும், உலக விவகாரங்களில் ஒரு தலைப்பட்சமான முடிவுகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை விமர்சித்துவந்தார். ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இயற்கை வாயுக் குழாய்கள் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு அமெரிக்கா செய்து வந்த நிர்பந்தத்தை வன்மையாகக் கண்டனம் செய்யும் அளவுக்குக்கூடச் சென்றார். ஆனால், சென்ற ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஷ்யாம் சரண், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எத்தகைய மாற்றத்தை அடைந்திருக்கிறது என்பதை பகிரங்கப்படுத்தினார்:"ஆசியாவில் சரியான சமநிலை ஏற்பட வேண்டுமானால், இந்தியா அமெரிக்காவுடன் சேர வேண்டும்''.7. இதைத்தான் சென்ற ஜூலையில் மன்மோகன் சிங் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம் உறுதிப்படுத்தியது. அமெரிக்காவின் தேசியப் பத்திரிகையாளர் சங்கத்தில் பேசிய மன்மோகன் சிங், ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போரைப் பற்றிய ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், "அது கடந்தகால விஷயம்' எனக் கூறினார். அவரும் ஜார்ஜ் புஷ்ஷ¥ம் விடுத்த கூட்டறிக்கை, "இரு நாடுகளுக்கிடையிலான நட்பை உலகளாவிய கூட்டுப்பங்காண்மையாக மாற்ற இருவரும் உறுதிபூண்டுள்ளதாக' கூறியது. ஆ•ப்கானிஸ்தான் மீதும் ஈராக் மீதும் ஆக்கிரமிப்புப் போரை நடத்திய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் புஷ்ஷை 'சர்வதேச பயங்கரவாதம் உருவாக்கும் சவால்களை எதிர்கொள்வதில் உறுதியும் தீர்மானமும் மிக்க தலைமையை வழங்குபவர்' என மன்மோகன் சிங் வர்ணித்தார். அந்தக் கூட்டறிக்கை, கீழ்க்காணும் விஷயங்களையும் கோடிட்டுக் காட்டியது: 1.இந்திய -அமெரிக்க வர்த்தகம், தொழில் ஆகியவற்றை மேம்படுத்த இருநாட்டுத் தொழிலதிபர்களையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்; 2.இந்தியாவில் அமெரிக்க முதலீடுகள் செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் (அதாவது தனியார்மயமாக்கலுக்கும் தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படுவதற்கும் வழிகோல வேண்டும்); 3.இந்தியாவில் ஸ்திரமானதும் திறமைமிக்கதுமான எரிசக்திச் சந்தை உருவாக்கப்பட வேண்டும்; 4.விண்வெளி மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் தனியார்- பொதுத்துறை கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவேண்டும்; 5. உலகளாவிய ஜனநாயக முன்முயற்சித் திட்டத்தை உருவாக்க வேண்டும். இதில் அமெரிக்காவும் இந்தியாவும் முக்கியப் பங்கு வகித்து, 'ஜனநாயக நிறுவனங்களை' உருவாக்க விரும்பும் அரசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.8. இந்தக் கூட்டறிக்கை ,2005ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இரு நாடுகளும் செய்துகொண்ட ஓர் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியது. 'அமெரிக்க-இந்திய பாதுகாப்பு உறவுக்கான புதிய சட்டகம்' (New Framework for the US-India Defence Relationship) என்னும் பெயரிலமைந்த இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டவர்களில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முகர்ஜியும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்•பீல்டும் அடங்குவர். இந்திய இடதுசாரிகளால் மட்டுமின்றி, இந்தியாவின் பாதுகாப்பிலும் இராணுவ வலிமையிலும் அக்கறையுள்ள பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், ஐ.நா.சபையால் ஒப்புதல் தரப்படாத இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்க இராணுவத்துடன் இந்திய இராணுவமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளையும் உள்ளடக்கியுள்ளது.எனினும் அந்தக் கூட்டறிக்கையில் உள்ள மற்ற எல்லாவற்றையும்விட மிக முக்கியமான விஷயம் அணுசக்தி தொடர்பானதாகும். இந்தியாவின் எரிசக்திக்குத் தேவையான அணுசக்தித் தொழில்நுட்பத்தையும் எரிபொருளையும் ((Fuel) விற்பனை செய்வதற்கு எதிரான சர்வதேசத் தடையை அகற்றுவதே இந்தக் குறிப்பிட்ட அம்சத்தின் நோக்கம். இந்தியா 1974இல் முதன்முதலில் அணுகுண்டு சோதனை நடத்திய பிறகு இந்தத் தடை விதிக்கப்பட்டது. 1998இல் பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்பு சோதனைக்குப் பிறகுதான் இந்தியா பகிரங்கமாகத் தன்னை அணுயுத நாடு, அதாவது அணு ஆயுதங்களை வைத்திருக்க சட்டரீதியான உரிமை உள்ள நாடு (இது 1968ம் ஆண்டு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மீறுவதாகும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை) என அறிவித்தது. இந்தியா உரிமை கொண்டாடும் இந்தத் தகுதியை மேற்சொன்ன கூட்டறிக்கை நேரடியாக அங்கீகரிக்கவில்லை என்னும் போதிலும், 'இந்தியா, மேம்பட்ட அணுசக்தித் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் பொறுப்பு மிக்க நாடு' எனக் கூறியது. அணுசக்தித் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச ஒப்பந்தத்திலும் அணுசக்தித் தொழில்நுட்பம், அணுசக்தி எரிபொருள் ஆகியனவற்றை விற்பனை செய்தல் குறித்த ஒழுங்குமுறை ஏற்பாட்டிலும் இந்தியாவிற்கு ஒரு சிறப்புத் தகுதி வழங்கப்படுவதை அமெரிக்கா ஆதரிக்கும் என்று கூறிய அந்த அறிக்கை சில நிபந்தனைகளையும் விதித்தது. அதாவது, இந்தியா தனது எரிசக்தித் தேவைக்கான அணுசக்தித் திட்டத்திற்கு சில வரம்புகளையும் சர்வதேச மேற்பார்வையயும் ஒப்புக்கொள்ளவேண்டும்; இதர அணு ஆயுத நாடுகளும் அமெரிக்க நாடாளுமன்றமும் (காங்கிரஸ்) ஒப்புதல் வழங்கவேண்டும்.அணு ஆயுதப் பரவலைத் தடை செய்யும் விதிகளை (இவ் விதிகள் அணு ஆயுத அரசுகள் என அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகியவற்றுக்குப் பொருந்தா!) மீறும் எந்தவொரு நாட்டிற்கும் இராணுவ, இராணுவ நோக்கமில்லாத பயன்பாடுகளுக்கான அணுச்சக்தித் தொழில்நுட்பத்தை விற்பனை செய்யக்கூடாது என அமெரிக்க, சர்வதேசச் சட்டங்கள் கூறுகின்றன. ஆனால், மேற்சொன்ன கூட்டறிக்கை, இந்த விதிகளிலிருந்து இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்குத் தருவதற்காக இந்த விதிகளையே மாற்றுவதற்கு அமெரிக்கா பொறுப்பேற்றுக் கொள்ளும் என்பதைத் தெளிவாக்கியது. 1974இல் இந்தியா அணுகுண்டு வெடிப்பு சோதனை நடத்திய பிறகு நவீனரக ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டிருந்தது. மன்மோகன் சிங்கின் அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு அத்தடைகள் நீக்கப்பட்டு வருகின்றன. புஷ்ஷின் நோக்கம் அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களுக்கு ஆதாயம் கிடைக்க வைப்பது மட்டுமல்ல; இந்தியா, அமெரிக்க இராணுவத் தொழில்நுட்பத்தையே என்றென்றும் சார்ந்திருக்க வேண்டும் என்னும் நிலையை உருவாக்குவதுமாகும்.9. ஈரான், தனது எரிசக்தித் தேவைக்காக வைத்திருக்கும் அணுசக்தி நிலையங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (International Atomic Energy Agency) மேற்பார்வைக்கும் ஆய்வுக்கும் சரிவர உட்படுத்தப்படவில்லை என்னும் வாதத்தை முன்வைத்து அவற்றை ஐ. நா.பாதுகாப்பு அவையின் மேற்பார்வைக்கும் சோதனைக்கும் உட்படுத்த வேண்டும் என அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக சென்ற ஆண்டு செப்டம்பரின் இந்தியா வாக்களித்ததையும் ஈரானுடன் இந்தியாவிற்கு நீண்டகாலமாக இருந்துவரும் நல்லுறவைக்கூட அது கருத்தில் கொள்ளவில்லை என்பதையும் மேற்காணும் பின்னணியிலேயே பார்க்க வேண்டும். இதிலுள்ள முரண் என்னவெனில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டுள்ளது. இந்தியா கையெழுத்திடவில்லை. ஏராளமான அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல் மீது இத்தகைய நிர்பந்தம் ஏதும் கொண்டுவரப்படவில்லை.10. இவ்வாண்டு மார்ச் மாதம் புஷ் இந்தியாவிற்கு வந்தபோது அணுசக்தி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அமெரிக்க நாடாளுமன்றம் (காங்கிரஸ்) ஒப்புதல் அளிக்குமேயானால், அணுசக்தித் தொழில்நுட்பத்தையும் எரிபொருளையும் சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து வாங்குவதற்கு இந்தியா அனுமதிக்கப்படும் என இந்த ஒப்பந்தம் கூறுகிறது. உலகில் அணுசக்தித் தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றை விற்பதையும் வாங்குவதையும் கட்டுப்படுத்தும் நாற்பத்தைந்து நாடுகளும் (Nuclear Supplier Group) இந்தியா மீதான தடையை அகற்றினால் இந்தியாவிற்கும் அணு ஆயுத நாடுகளுக்குமிடையில் அணுசக்தி தொடர்பான வர்த்தகம் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் அணுசக்தித் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு விற்க இந்த ஒப்பந்தம் வழி கோலுகிறது. இந்த ஒப்ப்ந்தத்தைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய எரிசக்தி மசோதாவுடன் (Bush Energy Bill) தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அந்த மசோதாவின்படி, புதிய அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கு அமெரிக்க அணுசக்தி நிறுவனங்களுக்கு 12 பில்லியன் டாலர் மான்யமாகக் கொடுக்கப்படும். அதாவது இந்தியாவிற்கு அணுசக்தி தொழில் நுட்பத்தையும் கருவிகளையும் விற்பதன் மூலம் இந்த நிறுவனங்கள் கொழுத்த இலாபங்கள் ஈட்டும்.அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்துடன் புஷ்ஷ¥டன் இந்திய அரசாங்கம் வேறு சில (துணை) ஒப்பந்தங்களையும் செய்துகொண்டுள்ளது: 1.விண்கலங்களை ஏவுவதற்கான ஒப்பந்தம். இது அமெரிக்காவால் உரிமம் தரப்பட்ட விண்கலங்களையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள பாகங்களைக் கொண்டுள்ள மூன்றாம் நாட்டு விண்கலங்களையும் ஏவுவதற்கு அனுமதிக்கிறது;2.உலகளவில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தவும் இதில் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெறவும் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கும்; 3.கதிரியக்கத்தின் மூலம் பதப்படுத்தப்பட்ட மாம்பழங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதை அனுமதிக்கும் ஒப்பந்தம்; 4.உயிரியல் தொழில்நுட்பம், உணவுப்பொருட்களைப் பதப்படுத்தி சந்தைக்கு அனுப்புதல், நீர் சேமிப்பும் பயன்பாடும், கல்வி ஆகியவற்றில் இரு நாடுகளும் கூட்டாகப் பணியாற்ற இந்தியாவிலுள்ள நாற்பது பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன; 5.சில்லறை வாணிபமும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளும் தாராளமயமாக்கப்பட்டுள்ளன; 6.சர்வதேச அணுமின் சக்தி ஆராய்ச்சியில் பங்கேற்க இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்படுகிறது;7.ஒன்றிணைந்த பெருங்கடல் ஆராய்ச்சித் திட்டத்தில் சேர இந்தியா அனுமதிக்கப்படுகிறது; 8.மின் உற்பத்திக்குத் தேவையான அணுசக்தித் துறையில் மட்டுமல்லாது, பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி போன்ற பிறவகை எரிசக்தித் துறைகளிலும் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாகச் செயல்படும்; 9.எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவும் இந்தியாவும் உலகம் முழுவதிலும் ஜனநாயகத்தைப் பரப்பும். மேலோட்டமாகப் பார்க்கும்போதே இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவை அமெரிக்காவின் மாகாணங்களிலொன்றாக மாற்ற முனைகின்றன என்பது தெளிவாகிறது. உலகில் ஜனநாயகத்தை ஊக்குவிக்க ஒரு ஒப்பந்தமாம்! அதாவது •ப்கன், ஈராக் பாணி ஜனநாயகத்தை உருவாக்க அமெரிக்கப் படைகளுடன் இந்தியப் படைகளும் சேர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.மன்மோகன் சிங்-- - ஜார்ஜ் புஷ் ஒப்பந்தத்தின் முதன்மையான அம்சம் அணுசக்தி தொடர்பானது என்பதைப் பார்த்தோம். இதன்படி இந்தியாவில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்பட்டு வருகிற மொத்தம் இருபத்தி மூன்று அணுசக்தி ஆலைகளில் இராணுவ நோக்கத்திற்கான (அதாவது அணுகுண்டு தயாரிப்பதற்கான) ஆலைகள் யாவை, இராணுவ நோக்கத்திற்கல்லாத (அணுமின் நிலையங்கள் போன்றவை) ஆலைகள் யாவை என்பன அடையாளம் காணப்பட்டு 2014ம் ஆண்டுக்குள் வகைப்படுத்தப்படும். இராணுவ நோக்கத்திற்கல்லாத பதினான்கு ஆலைகளை இந்தியாவே முன்வந்து சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (மிகிணிகி) மேற்பார்வைக்கும் சோதனைக்கும் உட்படுத்த வேண்டும். இப்போது கட்டப்பட்டு வருகின்ற எட்டு ஆலைகள் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் வரா. அணு ஆயுதங்கள் தயாரிக்க அவை புளூடோனியத்தை வழங்க அனுமதிக்கப்படும். ஏற்கனவே அணுசக்தி ஆலைகளில் பயன்படுத்தப்பட்டுவிட்ட எரிபொருளுக்கும் பாதுகாப்பு விதிகள் பொருந்தா. இந்தப் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் ஆயிரம் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் அளவுக்கு புளுடோனியம் இருக்கிறது. யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான வசதி இந்தியாவிடம் உள்ளது. இதுவும் அணு ஆயுதங்களுக்குப் பயன்படும். வருங்காலத்தில் இந்தியா கட்டும் அணுசக்தி ஆலைகள் இராணுவ நோக்கத்திற்கானவை, இராணுவ நோக்கத்திற்கானவையல்ல என வகைப்படுத்தும் உரிமை இந்தியாவிற்கே உண்டு.பொதுவாக புஷ்ஷின் வருகை குறித்தும் குறிப்பாக புஷ்-மன்மோகன் சிங் ஒப்பந்தம் குறித்தும் ஒரு தனியார் தொலைக்காட்சி சானல், கருத்துக் கணிப்பு நடத்தி இந்த ஒப்பந்தம், இந்தியாவின் மின்சக்தித் தேவையைப் பூர்த்தி செய்யுமாதலால், அதை எதிர்ப்பவர்கள் நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர்கள் எனப் பெரும்பாலானோர் கருதுவதாக ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. முதலாவதாக, இந்த ஒப்பந்தத்தின்படி இந்திய மக்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும். இரண்டாவதாக, இந்த ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க அரசு இந்தியா மீது வேறு சில நிபந்தனைகளை விதித்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மூன்றாவதாக, அணுமின் நிலையங்களால் ஏற்படும் பாதிப்புகள், அணுமின் நிலையக் கழிவுகளின் கதிர்வீச்சு (இந்தக் கழிவுகளை எரித்தோ புதைத்தோ ஒழித்துக் கட்டிவிட முடியாது. அவற்றைப் பாதுகாப்பான முறையில் சேமித்துவைக்கவும் முடியாது. அவற்றைப் பயன்படுத்தி நாமே அணு ஆயுதங்கள் தயாரிக்கலாம் அல்லது அணுமின் உற்பத்தி செய்யும் அல்லது அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு அனுப்பலாம். அப்படி அனுப்புகையில் ஏற்படும் ஆபத்துகள் பயங்கரமானவை. அவை பயங்கரவாதிகள் கைகளில் சிக்கிவிடலாம். மற்றோர் புறம், அமெரிக்கா எப்போதும் இந்தியாவின்மீது கரிசனம் காட்டிக் கொண்டே இருக்கும் என்பதற்கான் எந்த உத்திரவாதமும் இல்லை. நாளை, இந்தியா அமெரிக்காவின் ஆணைகளுக்கு பணிய மறுத்தால் அமெரிக்கா இந்தியாவின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கி அழிக்கக்கூடும். ஏனெனில் எந்த ஒரு நாட்டின்மீதும் படையெடுக்கும் ஒருதலைப்பட்சமான உரிமையை அமெரிக்க வைத்திருக்கிறது.மன்மோகன் சிங்- புஷ் ஒப்பந்தத்தில் வெளிப்பாடு கண்டிருக்கும் இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை, இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையைப் போலவே, இந்தியாவை பன்னாட்டு மூலதனங்களின் வேட்டைக்காடாக மாற்றிவிடும். இதில் அமெரிக்க மூலதனம் பெரும் பங்கு வகிக்கும். ஆக, இந்தியா இப்போது அமெரிக்காவின் காலடியில்.

Google Search- என்றொரு உளவாளி?

இது புதுமைவிரும்பியிடம் இருந்து இரவல் வாங்கியது.

கடந்து இரண்டு வருடங்களாய், நான் அதிகமாய் சென்றுவந்து இணைய தளம் Google Search தான். ஒரு நாளைக்கு, குறைந்தது 20 சொற்கள் அல்லது வார்த்தைகளைத் தேடுவது எனக்கு வழக்கமாகும். இது பெரும்பாலும், நான் விரும்பிய புத்தகங்கள், படங்கள், இசைகள், தலைவர்கள் பற்றிய ஓசி விமர்சனங்களைப் படிப்பதற்காக இருக்கும். அபூர்வமாக, அது எனது தொழில் முன்னேற்ற விசயங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும் இருந்து விடுவதுண்டு! இதே மாதிரி, மனதுக்கு படுகிற விசயங்களையெல்லாம், Google Searchல் தேடுகிற நோய் சில வருடங்களாய் எல்லோருக்கும் தொற்றி வருகிறது. நீங்கள் அப்படிப்பட்ட நோயுள்ளவராயிருந்தால், உங்களுக்கும், எனக்கும் சேர்த்து, இப்பொழுது ஒரு திடுக்கிடும் செய்தி.உங்களின் விருப்பங்களை, கனவுகளை, வினோதமான ஆசைகளைப் பற்றி அறிந்த, உங்கள் அந்தரங்க கட்டிடத்தின் மூலை-முடுக்குகளைப் பற்றி துல்லியமாய் அறிந்த இன்னொரு ஐந்து இருக்கின்றதென்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அது தான் உண்மை. அது வேறு யாருமில்லை- Google Search தான். இப்பொழுது எனது குற்றச்சாட்டுக்கு அடிப்படையான சில செய்திகளை சொல்லயிருக்கிறேன்.சில வாரங்களுக்கு முன்பாக, AOL என்ற தேடும் இணையம் (search-engine என்பதற்கு எவ்வளவு மோசமான மொழிபெயர்ப்புடா சாமி! என்று நீங்கள் புலம்புவது எனக்குக் கேட்கிறது) , 658, 000 பேர்களின் Search Key-words (30 million சொற் தொடுப்புகள் (queries)) தொகுப்பை பொது ஆராய்ச்சிக்காக வெளியிட்டிருந்தது. இது இந்த இணையத்தைப் பயன்படுத்தியவர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உபயோகிப்பவர்களின் பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு, இதைத் திரும்பப்பெற்றுக்கொண்டதுடன், மன்னிப்பும் கேட்டுக்கொண்டது இந்த நிறுவனம். ஆனாலும், இந்த நிகழ்ச்சி search-keywords தொகுப்பின் முக்கியத்துவத்தை உணர உதவியாய் இருந்தது.இந்த தேடுதல்கள் மூலம் ஒருவர் தன்னைப் பற்றிய எல்லா தகவல்களையும், வெளியிட்டு விடுகிறார். உதாரணமாக அவரது பெயர் (எல்லோரும் google searchல் அவரவர் பெயரை தேடிப்பார்ப்பது ஒரு இயல்பான விசயம்), இப்பொழுதைய தொழில் (எந்த மாதிரியான தொழில் சம்பந்தமான வார்த்தைகளைத் தேடுகிறார் என்பதை வைத்து சொல்ல முடியும்), அவரது விருப்பங்கள் (இசை, திரைப்படங்கள் , கவிதைகள், புத்தகங்கள்) போன்றவற்றை போதுமான search-keywords database கொண்டு சொல்லிவிடமுடியும். மற்றபடி, அவரின் இருப்பிடம் (geographical location) கண்டுபிடிப்பது மிகமிக சுலபம். உதாரணமாக, IP (internet protocol) எண்ணை வைத்துக்கொண்டு, நீங்கள் எந்த ஊரில் இருந்து, எந்த இடத்தில் இருந்து இதைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லிவிடமுடியும். அதற்கும் மேலாக, நீங்கள் இயலபான மன நிலையில் உள்ளவரா என்பதைக் கூட கண்டுபிடித்துவிட முடியும். உதாரணமாக, kill, murder, torture, child-porno, suicide, போன்ற வார்த்தைகளை இணையத்தில் ஒருவர் அடிக்கடி தேடுகிறார் என்றால், நிச்சயம் அவரது சில நட்டுகள் கழன்றுவிட்டன என்று சொல்லிவிடலாம்.இப்பொழுது ஒத்துக்கொள்கிறீர்களா? Google-search உங்களைப் பற்றி எல்லாமும் அறிந்த ஒரு உளவாளி என்று.

கொசுறு தகவல்கள் :US நீதித் துறை (US justice department), Search-engine பயன்படுத்துபவர்களின் சொற்தொடுப்புகளை இரண்டு வருடங்களாவது அந்தந்த நிறுவனங்கள் சேமித்துவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அதோடு, US அரசு இந்த சொற்தொடுப்பு தகவல்களை, Google, Microsoft நிறுவனங்களிடமிருந்து கேட்டிருப்பதும் அதை இந்த நிறுவனங்கள் தர மறுத்திருப்பதும் முன்பு வெளியான செய்திகள்.உங்களிடம் உள்ள ஒரே பாதுகாப்பு, நீங்கள் 65 பில்லியன் மனிதர்களில் ஒருவர் என்ற உண்மை தான். அதனால், இந்த தேடல் இணையங்கள் கையாளவேண்டிய தொகுப்பின் (database) அளவு அபரிமிதமானது. ஆனால், data-mining துறையில் நடக்கும் முன்னேற்றம் கூடிய விரைவில் இந்த database கையாளும் திறனை அதிகப்படுத்திவிடும்.

source:
http://pudhumaivirumpi.blogspot.com/2006/08/google-search.html

Tuesday, August 15, 2006

அறிமுகம்

இங்கு செய்திகள் இரவல் வாங்கப்படும்.