Friday, May 04, 2007

தகவல் உரிமை பற்றித் தெரியுமா உங்களுக்கு?

மிகப் பரவலாக இந்தியாவில் இரெண்டு வருடங்களாகப் பேசப் படுவது நமக்கு அளிக்கப் பட்டுள்ள தகவல் உரிமை. ஆனால் இதைப் பற்றி படித்த பலருக்கே தெரியாத பட்சத்தில் என் வக்கீல் நண்பர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இதோ இந்தப் பதிவைப் போடுகிறேன்.



தகவல் உரிமை என்றால் என்ன?



இந்திய அரசியல் சட்டம் 19(1)ன் கீழ் அனைத்து குடிமகனுக்கும், பேச்சுரிமையும், கருத்துரிமையும் அடிப்படை உரிமைகளாக வழங்கப் பட்டுள்ளன. ஆனால் இந்த உரிமை தகவல் உரிமை இல்லாத பட்சத்தில் வெறும் பல்பிடுங்கிய பாம்பிற்கு சமமாகதான் கருதப்படும். ஆக நமது பேச்சுரிமையை முழுவதுமாக அனுபவிக்க அதற்கு தேவையான தகவல் மிக அவசியமாகின்றது. குடியாட்சியில் எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள். அந்த மன்னர்களுக்கு இந்த நாட்டில் அரசில் நடக்கும் சம்பவங்களை தெரிந்து கொள்ள முழு உரிமை வழங்கப் பட வேண்டும். இச்சூழலில் ஒரு குடிமகன் அரசு அலுவலகத்திற்குச் சென்று ‘நான் இந்நாட்டு மன்னன். எனக்கு உனது கோப்புகளைக் காண வேண்டும்’ என்று கேட்டால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். எனவே இதற்கு ஒரு சீரான அமைப்பின் அவசியம் தேவைப்படுகின்றது. அந்தக் குறையைத் தீர்க்கவே இச்சட்டம் நிறைவேற்றப் பட்டது.



தகவல் உரிமச் சட்டம் 2005ன் கீழ் இருக்கும் உரிமைகள் என்ன?





இதன் கீழ் அனைத்துக் குடிமகனும்

1. அரசிடம் இருந்து தேவையானத் தகவல்களைப் பெறலாம்

2. அரசு ஆவணங்களையும் பெறலாம்

3. அரசு ஆவணங்களைச் சோதனைக்கு உள்ளாக்கலாம்

4. அரசின் திட்டங்கள் எதிலும் முறைகேடுகள் இருக்கின்றனவா என்று ஆய தேவையான சான்றுகளைத் திரட்டலாம்





தகவல்களை யாரிடம் இருந்து பெறுவது?



இதுதான் அனைவருக்கும் இருக்கின்ற குழப்பம். இந்தச் சட்டத்டின் கீழ் ஒவ்வொரு அரசு அலுவகத்திலும் குடிமக்கள் தகவல் அலுவலர் (public information officer) நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் சென்று உங்களுக்குத் தேவையானத் தகவல்களைப் பற்றி விண்ணப்பித்தீர்கள் ஆனால் உங்களுக்குத் தேவையானத் தகவலைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்க வேண்டியது அவருடைய கடமை. தவறினால் மேற்கொண்டு மாநில தகவல் அலுவலரிடமோ அல்லது தலமை ஆணையரிடமோ்ரிடமோ சென்று முறையிடவும், நீதிமன்றத்தின் உதவி நாடவும் உரிமை உள்ளது.



எங்கே சென்று விண்ணப்பிப்பது?



மேற்சொன்னவாறு PIOவிடம் செய்யலாம். அல்லது தபால் நிலையங்களில் கூட உங்களது விண்ணப்பத்தை் அனுப்பலாம். அங்கே நீங்கள் விண்ணப்பித்தற்கான ரசீது வாங்க மறக்க வேண்டாம்.





கட்டணம் உண்டா?



ஆமாம். குறைந்த பட்சமாக மத்திய அரசின் ஆவணங்களுக்கு ரூ.10 அளிக்க வேண்டும். ஆனால் நாம் விரும்பும் தகவல்களுக்கு ஏற்றவாறு கட்டணம் மாறுபடும். மேலும் விவரங்களுக்கு அந்த அந்த மாநில அரசின் இணைதளங்களுக்குச் சென்று பார்க்கலாம்.



PIO குறித்த தகவல் எங்கே கிடைக்கும்?



http://rti.gov.in என்ற வலை தளத்தில் இருந்து தேவையானத் தகவல்களைப் பெறலாம்



நமது தேவைக்கான காரணம் கூறவேண்டுமா?



கண்டிப்பாக இல்லை





விண்ணப்பப் படிவம் உண்டா?



இல்லை வெற்றுத் தாளில் உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பற்றி குறிப்பிட்டு, கட்டணத்திற்கான டி.டி. அல்லது பி.ஒ. போட்டு அனுப்பினால் போதுமானது.



எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்?



குறைந்த பட்சம் 30 நாட்களுக்குக் காத்திருக்க வேண்டும். ஆனால் நாம் தேடும் விஷயம் நமது உயிர் சம்பந்தப் பட்டதாக இருந்தால் 48மணிநேரத்திற்குள் உங்களுக்குத் தகவல் கொடுக்க வேண்டியது அரசின் கடமை.



இது மட்டும் இல்லைங்க இன்னும் நிறைய இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கு இங்கே கிளிக்குங்கள் ்த





இதன்மூலம் உங்களுக்குத் தகவல் மறுக்கப் பட்டாலோ, தவறான தகவல் அளிக்கப்பட்டாலோ ரூ.25,000 வரை அபராதம்கிடைக்கும்.



ஆக இந்த உரிமையைப் பற்றி தெரிந்து கொண்டு நம்ம pks மதன்பாப் மாதிரி நீங்க புது குடித்தனமே நடத்தலாம்…….

நன்றி:
http://ayanulagam.wordpress.com/2007/05/01/